எச்சில் இலை மீது உருளுவதா? தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் சத்குரு சதாசிவம் பிரம்மேந்திராள் ஜீவ சமாதி கோயிலில் ஆராதனை விழாவின் போது பக்தர்கள் உண்ட எச்சில் இலை மீது உருண்டு வேண்டுதல் செய்யும் சடங்கு நடைபெற்று வந்தது.
இதற்கு மாவட்ட ஆட்சியர் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதால், கரூரை சேர்த்த நவீன்குமார், உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அனுமதி கோரி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கிராமங்களில் வழக்கமான மத நிகழ்வுகளை நடத்துவதற்கு அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை. விழா ஏற்பாட்டாளர்கள் ஒலி பெருக்கிகள் பொருத்த வேண்டும் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே அனுமதி பெற வேண்டும்.
எனவே, மனுதாரருக்கு அனுமதி வழங்குவது பற்றிய கேள்வியே இல்லை. சாதி பாகுபாடு இல்லை என்பது தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. பக்தர்கள் உணவை உட்கொண்ட பிறகு, வாழை இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை இல்லை. வழிபாட்டு உரிமை, அடிப்படை உரிமையை மனுதாரர் இவ்விஷயத்தில் பயன்படுத்த முடியும். இதில் மற்றவர்கள் தலையிட முடியாது. எனவே இந்த விழா நடத்த அனுமதி வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து கரூர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாணவர் சங்க தலைவர் அரங்கநாதன் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது மத நிகழ்ச்சியாக இருந்தாலும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இதேபோன்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
ஆதிகாலத்தில் மனிதன் மாமிசத்தை அப்படியே சாப்பிட்டான் என்பதற்காக இப்பவும் அப்படியே சாப்பிட்டால் சரியா? அதைப் போலத்தானே இத்தகைய சடங்குகளும்? மனித வாழ்க்கையைப் பொறுத்தவரை மாற்றம் ஒன்றே மாறாதது