பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்.. போலீஸ் தேடுதல் வேட்டையில் கோவை தமன்னா!!

கோவையை சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படித்தபடி பட்டா கத்தியுடன் வெளியிட்ட வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகரில் அண்மையில் நடைபெற்ற கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து மாநகர போலீசார் ரவுடிகளை கண்காணித்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களையும் சைபர் கிரைம் போலீசார் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் ‘FRIENDS CALL ME THAMANNA’ என்ற பெயரில் கணக்கு ஒன்றை வைத்துள்ளார். அவர் அன்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்பிடித்தவாறு பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “எதிரி போட நினைச்சால் காலை வெட்டுவோம்” என்று வன்முறையை தூண்டும் வகையிலான பாடலுடன் பாடலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் மாநகர போலீசார் அந்த இளம்பெண் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரை பிடிக்க மாநகர போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் பெண்ணின் பெயர் வினோதினி என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த பெண் அன்மையில் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவரை கொலை செய்த நபர்களுடன் இன்ஸ்டாவில் நண்பராக உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த பெண் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.