சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. நாளை முதல் வெளுத்து வாங்கப்போகும் கனமழை

 
Red Alert

தமிழ்நாட்டில் 15 மற்றும் 16-ம் தேதிகளில் கன முதல் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று (அக்.13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 15 மற்றும் 16-ம் தேதிகளில் வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது எனவும், நாளை முதல் பல்வேறு பகுதிகளில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “வங்கக் கடலின் தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை (அக். 14) தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது தொடர்ந்து வலுபெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 15, 16 ஆகிய தேதிகளில் புதுவை, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலைகொள்ளக் கூடும். இதன் காரணமாக அடுத்து வரும் 5 தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை தொடரக்கூடும்.

அடுத்த 24 மணிநேரத்தில் தஞ்சை, மதுரை, திருவாரூர், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும், தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

Rain

14-ம் தேதி விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

15-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

16-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

Balachandaran

17-ம் தேதி ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியைப் பொறுத்தவரை இன்று (அக். 13) முதல் விட்டுவிட்டு மழை துவங்கி, நாளை முதல் படிப்படியாக அதிகரித்து, 15 மற்றும் 16 தேதிகளில் கன முதல் அதி கன மழை பெய்யக்கூடும். இதனால் அந்த தேதிகளில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலம் தென்மேற்கு பருவமழை விலகி 15, 16ம் தேதிகளில் வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது” எனத் தெரிவித்தார்.

From around the web