ரம்ஜான் நோன்பு தொடங்கியது!! பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை!!

இஸ்லாமியர்களின் புனித மாதம் தொடங்கியதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இஸ்லாமிய மக்கள் இன்று ரம்ஜான் நோன்பைத் தொடங்கியுள்ளனர்.
புனித நூலான குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால், இஸ்லாமியர்கள் இந்த மாதத்தை புனித மாதமாக கருதி, மாதம் முழுக்க நோன்பினை கடைப்பிடிக்கிறார்கள். இஸ்லாமிய வழக்கத்தின் படி சந்திரனின் பிறை பார்க்கப்பட்டு மாதம் கணக்கிடப்படுகிறது. அதன்படி மாத்ததின் முடிவில் பிறை தென்பட்டால் ஒரு மாதத்தில் 29 நாட்கள் நோன்பு வைப்பார்கள்.பிறை தென்படவில்லை என்றால் 1 நாளை சேர்த்து 30 நோன்பு வைத்து கடைப்பிடிப்பார்கள்.
ஷஃபான் மாதம் நிறைவு பெற்றதையொட்டி ரமலானுக்காக தமிழ்நாடு முழுவதும் பிறை பார்க்கப்பட்டது.பிறை தென்படாததால் ஷஃபான் மாதத்தை 30 நாளாக் பூர்த்தி செய்வதாக தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி சுல்தான் சலாஹுதீன் அய்யூப் அறிவித்துள்ளார்.அதன்படி ரம்ஜான் மாதத்தின் முதல் நோன்பு மார்ச் 2 ஞாயிற்றுக் கிழமை முதல் கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.