20 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை அலெர்ட்!
தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, டிசம்பர் 20-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லோசனது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (டிச. 16) தென் தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.