தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் அடுத்த சில மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் தூத்துக்குடியில் உப்பள தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.