கோவையில் ஒரே மேடையில் ராகுலும் - ஸ்டாலினும் பிரச்சாரம்.. பரபரக்கும் தேர்தல் களம்
கோவையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக இன்று ஆதரவு திரட்டுகிறார்கள்.
இந்தியாவில் 18வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாடு தலைவர்கள் மட்டுமல்லாமல், தேசிய தலைவர்களும் தமிழ்நாட்டில் முகாமிட்டு, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்தவகையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழ்நாட்டில் தன்னுடைய பிரச்சாரத்தை துவங்குகிறார். இதற்காகவே, திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் தனியார் பள்ளி வளாக மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, தென்காசி திமுக வேட்பாளர் ராணி ஶ்ரீகுமார் ஆகியோரை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் செய்ய போகிறார்.
அதேபோல, திமுக அடங்கிய இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும், மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவை, பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களான கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்ள போகிறார்கள்.
இதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து கோவைக்கு வருகிறார். இதேபோல் ராகுல்காந்தியும் நெல்லை பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு கோவைக்கு வருகிறார். தொடர்ந்து 2 தலைவர்களும், கோவை எல்.அண்ட்டி சாலையில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். அப்போது இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக ஆதரவையும் திரட்டுகிறார்கள். இந்த பொதுக்கூட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 12 சட்டசபை தொகுதிகளிலிருந்து 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.