இலங்கை கடற்படையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் போராட்டம்.. சீமான் அழைப்பு!!

தமிழ்நாட்டு மீனவர்களை அத்துமீறி கைது செய்து வரும் இலங்கை கடற்படையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் சீமான், நாம் தமிழர் கட்சி சார்பில் சனிக்கிழமை, மார்ச் 22ம் தேதி மாலை 3 மணிக்கு ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து சீமான் விடுத்துள்ள அறிக்கையில்,
”எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! நாம் தமிழர் கட்சியின் - மீனவர் பாசறை நடத்துகின்ற, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! தொடர்ச்சியாக இலங்கை கடற்படை இராணுவம் நம்முடைய மீனவச் சொந்தங்களைச் சிறைப்பிடித்து, சித்திரவதை செய்து, படகுகளைப் பறித்து ஏலம்விட்டு, சுட்டுக்கொலை செய்து, கொடுஞ்செயல்களைத் தொடர்ந்து செய்து வருகின்றது.
இந்தச் செயல்களைத் தடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை முன்வைத்து, மண்ணுக்கும் மக்களுக்குமாகப் போராடி வருகிற பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பேரெழுச்சியாகப் பங்கேற்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இராமேசுவரம் - தங்கச்சிமடத்தில், நடைபெறவிருக்கின்றது.
நாள்: 22.03.2025 சனிக்கிழமை மாலை சரியாக 3:00 மணிக்கு மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! மீனவர் பாதுகாப்பே மானத்தமிழர் பாதுகாப்பு” என்று தெரிவித்துள்ளார்