சொத்துப் பிரச்னை.. அண்ணியை கொன்று ஆழ்துளை கிணற்றில் புதைத்த கொழுந்தன்.. புதுக்கோட்டை அருகே அதிர்ச்சி சம்பவம்!

 
Viralimalai

புதுக்கோட்டை அருகே சொத்துக்காக கொழுந்தனே அண்ணியை கோடூரமாகக் கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ஆம்பூர்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருக்கு சேவியர் (42), ராயப்பன் (38) என இரண்டு மகன்கள் உள்ளனர். தந்தையின் சொத்துக்களை அண்ணன், தம்பி இருவரும் சரிசமமாக பிரித்துக் கொண்டனர். ராயப்பனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சேவியருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆரோக்கியமேரி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சேவியர் காலமாகிவிட்டார். இதையடுத்து அவரது பெயரில் இருந்த சொத்துகளை ஆரோக்கியமேரி தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். இந்த விஷயத்தில் ஆரோக்கியமேரிக்கும் ராயப்பனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. குழந்தைகள் இல்லாத நிலையில் அண்ணனின் சொத்துகளை எதற்காக பெயர் மாற்றிக் கொண்டீர்கள் என்று அண்ணியிடம் அடிக்கடி ராயப்பன் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

murder

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ஆரோக்கியமேரி தனது நெல் வயலில் இருந்த மயில்களை விரட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவரது சகோதரர் மணப்பாறையில் இருந்து செல்போனில் அவரிடம் பேசியுள்ளார். மீண்டும் 7 மணி அளவில் அவர் ஆரோக்கியமேரியை போனில் அழைத்த போது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சகாயராஜ், உடனடியாக ஆம்பூர்பட்டிக்கு விரைந்து வந்தார். வீட்டில் தனது சகோதரி இல்லாததால் பதற்றமான அவர், உறவினர்களுடன் சேர்ந்து பல இடங்களில் ஆரோக்கியமேரியைத் தேடி உள்ளார்.

எங்கு தேடியும் கிடைக்காததால் இது தொடர்பாக சகாயராஜ் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது ஆரோக்கியமேரியின் வயலில் இருந்து சிறிது தூரத்தில் காட்டுப் பகுதியில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு ஒன்றில் புதிதாக மண் போட்டு மூடி இருப்பதை கண்டு சந்தேகமடைந்தனர்.

Mathur PS

இதையடுத்து மாத்தூர் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், வட்டாட்சியர் கருப்பையா முன்னிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆழ்துளை கிணறு தோண்டப் பட்டது. அப்போது, கொலை செய்யப்பட்ட ஆரோக்கிய மேரியின் உடல் ஆழ்துளை கிணற்றில் சொருகி வைக்கப்பட்டு இருந்தது கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வயலில் இருந்த ஆரோக்கியமேரியை ராயப்பன் அடித்துக் கொலை செய்திருக்கிறார். பிறகு உடலை அவரது டிராக்டரில் வைத்து எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து 100 மீட்டர் தூரமுள்ள காட்டுப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் உடலை செருகி மண்ணை கொட்டி புதைத்திருக்கிறார். விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்ததை அடுத்து ராயப்பனை கைது செய்த போலீஸார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

From around the web