14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பூசாரி.. 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!
சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கொழுமம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (57). கோவில் பூசாரியான இவர், கடந்த 2021-ம் ஆண்டு கோவிலுக்கு சாமி கும்பிட வந்த 14 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் உடுமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், கர்ப்பமாக்கிய குற்றத்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை பிரிவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம், கொலை மிரட்டல் பிரிவுக்கு ரூ.2 ஆயிரம் என 17 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.