தமிழகத்தில் பாடப் புத்தகங்களின் விலை அதிரடியாக உயர்வு.. மாணவர்கள் அதிர்ச்சி!
தமிழ்நாட்டில் 1 முதல் 10-ம் வகுப்பு பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தி பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பாடநூல் கழகம் ஆண்டுதோறும் சுமார் 5 கோடி பாடப் புத்தகங்களை அச்சிட்டு பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த பாடப் புத்தகங்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப் புத்தங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
அதேபோல, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களும் இந்த பாடப் புத்தகங்களை வாங்குகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தி பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, 1-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.160 உயர்ந்து, ரூ.550-க்கு விற்பனையாகிறது. 2-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.150 உயர்ந்து ரூ.530-க்கு விற்பனையாகிறது.
3-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.190 உயர்ந்து ரூ.620-க்கு விற்பனையாகிறது. 4-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.180 உயர்ந்து, ரூ.650-க்கு விற்பனையாகிறது. 5-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.200 உயர்ந்து ரூ.710-க்கு விற்பனையாகிறது. 6-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.320 உயர்ந்து ரூ.1,110க்கு விற்பனையாகிறது. 7-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1,200 விற்பனையாகிறது.
8-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.310 உயர்ந்து ரூ.1,000 உயர்ந்துள்ளது. 9-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1,110க்கு விற்பனையாகிறது. 10-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து, ரூ.1,130க்கு விற்பனையாகிறது. காகிதங்களின் விலை உயர்வு, அச்சடிப்பதற்கான கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தியுள்ளதாக பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.