100 அடி கிணற்றில் தவறி விழுந்து நிறைமாத கர்ப்பிணி பலி.. தேனி அருகே அதிர்ச்சி சம்பவம்!

 
Palani Chettipatti

தேனி அருகே 100 அடி கிணற்றில் தவறி விழுந்த நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே வாழையாத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி போஸ் (25). இவரது மனைவி முருகேஸ்வரி (21). இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் முருகேஸ்வரி நிறைமாத கர்ப்பிணியானார். அவருக்கு வளைகாப்பு முடிந்ததை தொடர்ந்து அதே ஊரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். ஓரிரு நாட்களில் அவருக்கு பிரசவம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவருடைய குடும்பத்தினர் இருந்தனர்.

நேற்று காலையில் முருகேஸ்வரி தனது பெற்றோர் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள ஒரு கிணற்றுக்கு அருகில் ஆட்டுக்குட்டிகளுக்கு இரை பறிக்கச் சென்றதாகவும், அப்போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அவருடைய தாய் மீனா சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்க முயன்றனர். அந்த கிணறு சுமார் 100 அடி ஆழம் கொண்டது. அதில் சுமார் 50 அடிக்கு தண்ணீர் இருந்தது.

dead-body

இதனால் அவரை மீட்க முடியவில்லை என்பதால் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேனி தீயணைப்பு படைவீரர்கள், தண்ணீரில் குதித்து முருகேஸ்வரியை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, நீருக்குள் அதிக நேரம் முழ்கி மீட்பு பணியில் ஈடுபடும் அனுபவம் பெற்ற அடைக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஞானசேகரன் என்பவரை போலீசார் அங்கு அழைத்து வந்தனர். அவர் கிணற்றில் குதித்து சில நிமிடங்களில் முருகேஸ்வரி உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தார். காலையில் விழுந்தவரின் உடல் சுமார் 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டது.

Palani Chettipatti PS

இதில் முருகேஸ்வரி உயிரிழந்த நிலையில், அவருடைய வயிற்றில் இருந்த சிசுவும் இந்த உலகை பார்க்கும் முன்பே பரிதாபமாக இறந்தது. பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது, கிணற்றுக்கு அருகில் வளையல்கள் உடைந்து கிடந்தன. அதுதொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து முருகேஸ்வரியின் தாய் மீனா கொடுத்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஓராண்டு தான் ஆகிறது என்பதால் இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web