பிரபல யூடியூபர் TTF வாசன் கைது.. ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் வழக்குப்பதிவு!

 
TTF Vasan

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மதுரை அண்ணாநகர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 2கே கிட்ஸ்கள் மத்தியில் சமீபத்தில் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் யூடியூபில் ட்வின் த்ராட்லர்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சிறுவர்களை கவர்ந்து வரும் டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறிய புகாரின் பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.

பாதுகாப்பான முறையில் வாசன் பைக்கை ஓட்டினாலும் அவர் 2கே கிட்ஸ்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. விமர்சனங்களைத் தாண்டி டிடிஎஃப் வாசனை யூடியிபில் சப்ஸ்கிரைப் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

TTF Vasan

இதனிடையே, மோட்டார் சைக்கிள் சாகசம் செய்து சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசனுக்கு 10 ஆண்டுகள் மோட்டார் சைக்கிள் ஓட்ட கோர்ட்டு தடை விதித்தது. இதையடுத்து டிடிஎஃப் வாசன் கார் மூலமாக ஊர் ஊராக சுற்றி வருகிறார். கார் ஓட்டியபடி வீடியோவும் பதிவு செய்து வருகிறார். 

இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி இரவு 7.50 மணியளவில் மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் காரை அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாகவும் செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டியும், அதனை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவு செய்து யூ-டியூப் சேனலில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. 

இது குறித்து மதுரை மாநகர ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் மணிபாரதி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார், டிடிஎஃப் வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.

TTF Vasan

இந்நிலையில், செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வழக்கில் கைதான டிடிஎஃப் வாசன் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது பிறருக்கு மரணத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் என்ற மற்றொரு பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வாசனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனைக்கு பிறகு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்படுகிறார்.

From around the web