மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி.. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா

 
Ponmudi

இன்று பிற்பகல் 3.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கில், உயர்நீதிமன்றம் விதித்த தண்டனை மற்றும் அபராதத்தை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவருடைய தகுதி நீக்கம் ரத்தாகி மீண்டும் திருக்கோவிலூர் எம்.எல்.ஏ ஆனார். இதைத்தொடர்ந்து அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரைத்தார். ஆனால் அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார்.

Ponmudi

ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக சரமாரியான கேள்விகளை எழுப்பிய தலைமை நீதிபதி, ஆளுநர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக கண்டனம் தெரிவித்தார். 

மேலும் ஆளுநர் இவ்வாறு நடந்து கொள்வது முறையல்ல. தமிழ்நாடு ஆளுநர் உச்சநீதிமன்றத்தை அவமதித்துள்ளார். பொன்முடியை குற்றவாளி என தீர்மானித்த உத்தரவை உச்சநீதிமன்றம் இருநீதிபதிகள் கொண்ட அமர்வு நிறுத்தி வைத்த பின், அவர் குற்றவாளி இல்லை என ஆளுநர் எங்களுக்கு பாடம் நடத்த முடியாது. ஆளுநருக்கு இரவு முழுவதும் காலக்கெடு விதிக்கிறோம் இல்லையென்றால் இன்று தீர்ப்பு அளிக்கிறோம் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

Ponmudi

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, நேற்று மாலை சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்ய முன்வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் அமைச்சராக பதவியேற்க பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

From around the web