தமிழ்நாட்டில் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

 
Pongal

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து ஓரிரு நாளில் தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் இலவச வேட்டி, சேலை மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன்பிறகு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பணம் என படிப்படியாக லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது. இந்த நிலையில் வரும் 2024 பொங்கல் பண்டிகைக்கும் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த சூழலில், மிக்ஜாம் புயலால் கடந்த 3, 4-ம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டு, 25 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்து, அவர்களுக்கு வழங்குவது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது.

Pongal

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் வரலாறுகாணாத அளவில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதில், கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்ட பகுதிகளில் குடும்பங்களுக்கு ரூ.6,000 மற்ற பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு ரூ.1,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு பரிசு பொருட்கள் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருகிறது. வருகிற பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு தொகுப்பை வழங்க அரசு திட்டமிட்டு வருகிறது.

Pongal

இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும், ஜனவரி 2-வது வாரத்தில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

From around the web