ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு.. தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 
Pongal

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரெக்கப் பணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடையாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நிபந்தனையின்றி அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கப் பணம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Pongal

அதன்படி, கடந்த 1-ம் தேதி பொங்கல் தொகுப்பில் தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ வெல்லம், முழு கரும்பு ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதில், சுமார் 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், முகாம் வாழ் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ரூ.35.20 விலையில் ஒரு கிலோ அரிசியும், ரூ. 40.61 செலவில் ஒரு கிலோ வெல்லமும், ரூ.33 செலவில் ஒரு கரும்பும் கொள்முதல் செய்ய ரூ.238.92 கோடி ஒதுக்கப்பட்டது. மேலும் பொங்கல் பரிசுகளுடன் சேர்த்து இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 பரிசுத்தொகை வழங்கும் வினியோகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் தொடங்கி வைக்க உள்ளனர்.

pongal

இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 14-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 பரிசுத்தொகையை ரேஷன் கடைகளில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web