செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!! என்ன நடக்கிறது?

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் , செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கோட்டையன் தரப்பில் போலீஸ் பாதுகாப்பு கோரப்பட வில்லை என்று கூறப்படும் நிலையில், திடீரென்று ஏன் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் மூத்த தலைவரும் இன்றளவும் மிகவும் வேகமான செயல்பாட்டுடனும் இருந்து வருபவர் செங்கோட்டையன். அவர் மீது எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இதுவரைக்கும் எழுந்ததில்லை. இந்த நிலையில் செங்கோட்டையன் அதிமுகவில் கலகக்குரல் எழுப்பியுள்ள நிலையில், அவரை திமுக பக்கம் இழுக்க முயற்சி நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க தலைவராகவும் செங்கோட்டையன் இருப்பதால், திமுகவுக்கு அவர் வந்தால் மரியாதையான பொறுப்பு வழங்கவும் தயாராக இருக்கிறார்களாம். கொங்கு மண்டலத்தில் திமுகவை பலப்படுத்த செங்கோட்டையன் உதவியாக இருப்பார் என்று திமுக தரப்பு கருதுகிறதாம்.
ஆனால் தொடக்கத்திலிருந்து அதிமுகவில் மட்டுமே இருந்து வரும் செங்கோட்டையன் திமுகவுக்கு வர சம்மதிப்பாரா என்ற கேள்வியும் இயல்பானதே! முத்துசாமி, எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் என இன்றைய முன்னணி அமைச்சர்கள் பலரும் முன்னாள் அதிமுகவினர் என்பது மட்டுமே செங்கோட்டையன் முன் திமுகவில் சேர்வதற்கான காரணமாகும்.
கட்சியில் மரியாதைக்குரிய பொறுப்பு,மீண்டும் திமுக ஆட்சிக்கும் வரும்போது அமைச்சர் பதவி என்ற கோணத்தில் செங்கோட்டையனை அணுகுவதாகத் தெரிகிறது. செங்கோட்டையன் தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுக, பாஜக கூட்டணி என்பது அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மெண்ட் என்றும் கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டு அரசியலில் செங்கோட்டையன் மீண்டும் முக்கியத்தும் பெற்றுள்ளார்.