பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. கடலூரில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டி

 
PMK

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 10 தொகுதிகளில், 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பளர்கள் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது. 

2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே தமிழ்நாட்டில் கட்சிகள் தேர்தல் கால கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த தொடங்கியது. இறுதியாக தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி என்று 3 அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன. எனவே 4 முனை போட்டி என்பது உறுதியாகியுள்ளது.

இதில் பாஜக தலைமையிலான அணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதையடுத்து பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

BJP - PMK

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகளில், 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் வருகிற 19-ம் தேதி அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

PMK

9 வேட்பாளர்கள் விவரம்:

1. திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா
2. அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு
3. ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார்
4. கடலூர் - தங்கர் பச்சான்
5. மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின்
6. கள்ளக்குறிச்சி - இரா.தேவதாஸ் உடையார்
7. தர்மபுரி - அரசாங்கம்
8. சேலம் - ந.அண்ணாதுரை
9. விழுப்புரம் - முரளி சங்கர்

From around the web