திமுக அணிக்கு வரும் பாமக - ராமதாஸ் பிரிவு! செல்வப் பெருந்தகை சூசகம்!!

அப்பா - மகன் பிரச்சனையில் பாமகவில் குழப்பம் நீடித்த நிலையில், கட்சியினர் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் பக்கமே இருக்கின்றனர். பாஜகவின் நிர்ப்பந்ததால் அன்புமணி புதிய பாமக தொடங்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. கட்சி இரண்டாகும் போது ஒவ்வொரு பிரிவும் வேறு வேறு அணிகளுக்குத் தானே செல்ல முடியும்.
தொடர்ந்து பாஜக பக்கம் சாய்ந்து வரும் அன்புமணி ஒரு பக்கம் என்றால், அப்பா ராமதாஸுக்கு திமுக அணி தானே இயல்பான சாய்ஸ். அவருடைய அனுபவத்திற்கு நடிகர் விஜய் ஐ முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது என்பதெல்லாம் கேலிக்கூத்தாகி விடுமே. இதை சரியாகப் புரிந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், செல்வப் பெருந்தகை மூலம் தூது அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
உடல்நலம் குறித்து பார்க்கப் போனேன் என்று சொல்லும் செல்வப் பெருந்தகை பக்காவாக அரசியல் பேட்டி கொடுத்துள்ளார்.
”பாஜகதான் பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. கூட்டணி கட்சிகளை உடைக்கும் கலையில் பாஜக கைதேர்ந்தது. அதன்படி அதிமுகவை கபளீகரம் செய்யப் போகின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும்.
அதிமுகவுடன் கூட்டணி என்று கூறிவிட்டு, அண்ணா, பெரியாரை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிடுகின்றனர். இதை அதிமுகவினர் வேடிக்கைப் பார்க்கின்றனர். நேரு, இந்திரா காந்தி உள்ளிட்டோரை கொச்சைப்படுத்தி இருந்தால், நாங்கள் கூட்டணியில் ஒரு நொடி இருப்போமா?தலைவர்களை பலி கொடுத்து, அரசியல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? பாஜகவிடம் பயம் எதற்கு?
திமுகவுடன் பாமக கூட்டணி என்பதை இண்டியா கூட்டணியின் தமிழக தலைவரான முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தால், அதை ஏற்றுக் கொள்வோம். திமுக கூட்டணி ஒற்றுமையாகவும், வலிமையாகவும் உள்ளது. மீண்டும் திமுக ஆட்சி அமையும்” தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்வதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது.