தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளர் திடீர் மாற்றம்.. சௌமியா அன்புமணி போட்டி

 
sowmiya-anbumani
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே தமிழ்நாட்டில் கட்சிகள் தேர்தல் கால கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த தொடங்கியது. இறுதியாக தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி என்று 3 அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன. எனவே 4 முனை போட்டி என்பது உறுதியாகியுள்ளது.

இதில் பாஜக தலைமையிலான அணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதையடுத்து பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பாமக இன்று காலை வெளியிட்டது. காஞ்சிபுரம் தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் மற்றும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பாமகவின் தர்மபுரி தொகுதி வேட்பாளராக அரசாங்கம் என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார்.

sowmiya-anbumani

இந்த தொகுதியில் பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி வேட்பாளராக களமிறங்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அரசாங்கம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் இருந்தே, தர்மபுரியில் பாமக சார்பில் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டுமென கூட்டணி கட்சிகள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக பாமக கெளரவத் தலைவர் கோ.க.மணி, மாநில தலைவர் அன்புமணி ஆகியோர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் வேட்பாளர் அரசாங்கத்திற்கு பதிலாக, பாமக தலைவர் அன்புமணியின் மனைவியும், பசுமை தாயகத்தின் தலைவருமான சௌமியா அன்புமணியை தர்மபுரி தொகுதி வேட்பாளராக தற்போது பாமக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PMK

இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்படுகிறது.

From around the web