மேடைக்கு வருகை தந்த பிரதமர் மோடியை நோக்கி பறந்து வந்த செல்போன்.. பரபரப்பு வீடியோ!
பல்லடம் அருகே நடைபெற்ற பொதுக்கூடத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி திறந்த வெளி ஜீப்பில் மேடைக்கு வருகை தந்த போது செல்போன் ஒன்று பறந்து வந்து ஜீப் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தந்த பிரதமர் மோடி சூளூர் விமான நிலையித்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதாப்பூரில் நடைபெற்ற பாஜகவின் ‘என் மண் என் மக்கள்’ நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
முன்னதாக திறந்த வெளி வாகனத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்த பிரதமர் மோடி, இருபுறமும் திரண்டு இருந்த தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி வந்தார். வாகனத்தில் பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடன் நின்றனர்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்கள், மலர் தூவி பிரதமருக்கு வரவேற்பு கொடுத்தனர். அப்போது மலர் தூவியபோது மலர்களுடன் செல்போன் ஒன்று பறந்து வந்து பிரதமர் மோடி வந்த ஜீப் மீது விழுந்தது. இதை ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், தலைவர் அண்ணாமலை பார்த்து பதறினர்.
பிரதமர் மோடியை நோக்கி பறந்து வந்த செல்போன்.. பரபரப்பு வீடியோ#Modi #Palladam #BJP #mobile pic.twitter.com/KRYmnPdLO9
— A1 (@Rukmang30340218) February 28, 2024
இதை கவனித்த பிரதமர் மோடி தனது பாதுகாவலரிடம் சைகை காட்டி செல்போனை எடுக்க கூறினார். அவர் ஜீப் மீது ஏறி செல்போனை எடுத்து அங்கிருந்த காவலர்களிடம் ஒப்படைத்தார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில் மலர் தூவும்போது செல்போன் தவறி விழுந்தது தெரியவந்தது. அதன்பிறகு உரியவரிடம் செல்போனை ஒப்படைத்தனர்.