பிரதமர் மோடியை திகார் ஜெயில்ல போடனும்.. தேர்தலை திரும்ப நடத்தணும்.. காங்கிரசில் இணைந்த மன்சூர் அலிகான் பரபர

 
Mansoor Ali Khan

ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து மன்சூர் அலிகான் கடிதம் கொடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். 

இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் கட்சியை நடத்தி வந்தாலும், அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் அளிக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பலாப்பழம் சின்னத்தில் வாக்கு கேட்டு வேலூர் தொகுதி முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார் மன்சூர் அலிகான். தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரத்தின் கடைசி நாள் அன்று, மன்சூர் அலிகானுக்கு நெஞ்சு வலி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சென்னையில் மேல் சிகிச்சை பெற்று அவர் குணமடைந்து திரும்பியுள்ளார்.

Mansoor Ali khan

இந்நிலையில், தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மன்சூர் அலிகான், “பிரதமரை கைது செய்து திகார் சிறையில் அடைத்த பிறகு தான் தேர்தல் நடத்த வேண்டும். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பிரதமர் ஒரு வெங்காயத்தையும் உரிக்கவில்லை. நாட்டு மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கிவிட்டார்கள். வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரணக் குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போட வேண்டும்” என்றார்.

Mansoor Ali Khan

மேலும் பேசிய அவர், “முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விலகிவிட்டேன். காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைவதற்காக கடிதம் கொடுத்திருந்தேன். ஆனால் போய்ச் சேரவில்லை போல. அதனால் தான் தனியாக கட்சி தொடங்கினேன்.

மீண்டும் தாய் கட்சியில் இணைய உள்ளேன். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி என்ற மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். எனது 'இந்திய ஜனநாயக புலிகள்' கட்சியை காங்கிரஸ் உடன் இணைத்து அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

From around the web