பிரதமர் மோடி திறந்து வைக்கும் புதிய முனையம்!! தூத்துக்குடிக்கு ஜெட் விமானங்கள் வருமா?
தூத்துக்குடி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பயணிகள் முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்காக தனிவிமானத்தில் நாளை இரவு 7:50 மணிக்கு தூத்துக்குடி விமானநிலையத்திற்கு வர உள்ளார்.விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழாவை முடித்துக் கொண்டு இரவு 10:35 மணிக்கு அங்கிருந்து திருச்சிக்கு விமானத்தில் செல்கிறார்.
பிரதமரின் விமானம் இரவு தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கி மீண்டும் இரவே புறப்பட்டுச் செல்வதால், தூத்துக்குடிக்கு இனி பெரிய ஜெட் விமானங்கள் வரத்தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது வரையிலும் ப்ரொப்பெல்லர் வகையைச் சேர்ந்த இறக்கையில் விசிறி கொண்ட சிறிய விமானங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தது. அதுவும் இரவு நேரத்தில் விமானம் தரை இறங்கவோ, புறப்படவோ முடியாத நிலை இருந்தது.
விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக தூத்துக்குடி எம்.பி கனிமொழி தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்தார். விமான ஓடுதளத்தை நீட்டிக்கவும், இரவிலும் விமானங்கள் வந்து செல்லும் வசதியை ஏற்படுத்தித் தரவும் கனிமொழி எம்.பியின் குரல் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
இந்நிலையில் பிரதமரின் தனி விமானமே இரவில் இறங்கி மீண்டும் புறப்பட்டுச் செல்வதால், அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இனி ஜெட் ரக விமானங்கள் பகலிலும் இரவிலும் வந்து செல்லும என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏர்பஸ் ஏ321 ரக விமானங்களே வந்து இறங்க முடியும் என்று கூறப்படுகிறது
பெரிய ஜெட் விமானங்கள் வந்து போகும் என்றால், தூத்துக்குடியிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், கத்தார் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு நேரடி சேவை தொடங்குமா என்ற கேள்வியும் அடுத்து எழுகிறது.
பிரதமரின் விமான நிலைய முனைய தொடக்க விழாவில் இது குறித்தான அறிவிப்பு வெளிவருமா என்ற ஆவல் விமானப் பயணிகளிடையே ஏற்பட்டுள்ளது.
