பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பி ப்ளஸ்-2 மாணவி சகோதரனுடன் பலி... தஞ்சாவூர் அருகே சோகம்!!

 
Tanjore

அய்யம்பேட்டை அருகே தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய மாணவி சகோதரனுடன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே தாழக்குடி மேலத்தெருவில் வசித்து வருபவர் ரவி. இவரது மகள் விஷாலி (17). இவர், அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில் உள்ள ஒரு பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். நேற்று தொடங்கிய ப்ளஸ்-2 தமிழ் தாள் தேர்வு எழுத விஷாலி பள்ளிக்கு வந்தார். தேர்வு எழுதி விட்டு மீண்டும் அடுத்த தேர்வுக்காக தொடர்ந்து அதே பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தார்.

நேற்று மாலை விஷாலியை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக அதே ஊரைச் சேர்ந்த அவருடைய சித்தப்பா மகன் பிரதீப் (23), மோட்டார் சைக்கிளில் விஷாலி படிக்கும் பள்ளிக்கு வந்தார். அங்கிருந்து புறப்பட்டு அவர்கள் இருவரும் மோட்டார் சைக்களில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். 

Accident

அப்போது தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் நல்லிச்சேரி பிரிவு சாலை அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த ஒரு மரத்தின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து விஷாலி, பிரதீப் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு சென்றனர். பின்னர் பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Ayyampettai PS

விபத்து பற்றி தகவல் அறிந்தவுடன் இருவரின் உறவினர்கள், விஷாலி படித்த பள்ளியின் ஆசிரியைகள், சக மாணவிகள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த விபத்து காரணமாக தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

From around the web