ப்ளஸ்-2 மாணவி தற்கொலை.. உறவினர்கள் பள்ளில் மறியல்.. நடந்தது என்ன?

 
Villupuram

விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ப்ளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஒருக்கோடி கிராமத்தில் வசிக்கும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் நேதாஜி. இவரது மனைவி மதினா. இந்த தம்பதிக்கு சுனிதா என்ற மகளும், நரேஷ் என்ற மகளும் உள்ளனர். இவரது மகள் சுனிதா, விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். மகன் நரேஷ், 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் டிசம்பர் 13-ம் தேதி அரையாண்டு தமிழ் தேர்வு நடைபெற்றது. அப்போது மாணவி பிட் அடித்ததாகவும், இதைப் பார்த்த பள்ளி ஆசிரியை சௌமியா, பள்ளி முதல்வரிடம் புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது.

பள்ளி முதல்வர், மாணவி சுனிதாவின் தந்தை நேதாஜி, தாயார் மதினா இருவரையும் நேற்று முன்தினமே பள்ளிக்கு அழைத்து மாணவி செய்த சம்பவத்தை சொல்லி நாளைக்கு பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களுடன் அனுப்பி வைத்துள்ளார்.

Dead-body

பள்ளி கேட்டுக்கு வெளியில் வந்தவுடன் தந்தை நேதாஜி, ‘இப்படி தவறு செய்து அசிங்கப்படுத்துட்டியே’ என்று கோபப்பட்டு மாணவி சுனிதாவின் கன்னத்தில் அறைந்துள்ளார். கண்கலங்கியபடி பெற்றோர்களுடன் வீட்டுக்கு சென்ற மாணவி சுனிதா இரவு சாப்பிடாமல் சரியாக தூங்காமல் மௌனமாக இருந்துள்ளார்.

நேற்று டிசம்பர் 14-ம் தேதி மதியம், வீட்டில் இருந்த ஃபேனில் துணியால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவல் அறிந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், பகுஜன் கட்சி நிர்வாகிகளுடன் பள்ளிக்கு சென்று நியாயம் கேட்டு போராடி வருகின்றனர். இதனால் பள்ளிக்குள்ளும், வெளியேவும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெற்றோர்களிடம் புகார் கொடுங்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் என புகார் கேட்டும், புகார் கொடுக்காமல் நிர்வாகத்தினரிடம் ஆறு மணி நேரமாக பேசி வருகின்றனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தரப்பினர் எஸ்சி/எஸ்டி பிரிவிலும், கொலை வழக்கும் பதிவு செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.

Villupuram

பள்ளி நிர்வாகத்தினர், “இந்த பள்ளியில் இரண்டாயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர், அவர்களை நல் ஒழுக்கமாக திறமையாக உருவாக்க வேண்டும் என்று நல்ல கல்வியை கொடுத்து வருகிறோம், பிட் அடித்ததை கேட்பது தவறு என்றால் பள்ளியை எப்படி நடத்துவது” என்று கேள்வி கேட்கிறார்கள்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் போராடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web