இன்று ப்ளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்.. 3,300 மையங்களில் தேர்வு எழுதும் 7.25 லட்சம் மாணவ மாணவிகள்!

 
Exam

தமிழ்நாட்டில் ப்ளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 1) தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் ப்ளஸ்-2, ப்ளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி மாணவ - மாணவிகளுக்கு அடுத்தடுத்து பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. இதில் முதலில் ப்ளஸ்-2 மாணவ - மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 1) தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுத்தேர்வை பொறுத்தவரையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக சுமார் 7.25 லட்சம் மாணவ - மாணவிகள் இந்த தேர்வை எழுத உள்ளனர்.

Exam

தமிழ்நாட்டில் மட்டும் 3,300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அங்கு மாணவ - மாணவிகள் தேர்வை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதாகவும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 47 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடைத்தாள் மற்றும் வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு வருவதற்கும், மீண்டும் மாணவர்கள் எழுதும் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு சென்று வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர தேர்வு மையங்களில் காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை பிடிக்க 4,200 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

Exam

இன்று தமிழ் பாடத்தேர்வுடன் ப்ளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதற்கு அடுத்த தேர்வு வருகிற 5-ம் தேதி என ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 4 நாட்கள் இடைவெளிவிட்டு வருகிற 22-ம் தேதி வரை அவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இதற்கிடையில், ப்ளஸ்-1 மாணவ - மாணவிகளுக்கு வருகிற 4-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரையிலும், அதனைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ - மாணவிகளுக்கு வருகிற 26-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடக்க இருக்கிறது.

From around the web