காதலிக்க மறுத்த ப்ளஸ்-1 மாணவி.. பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. ஒருதலை காதலால் விபரீதம்!!

மதுரையில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேல அனுப்பானடி வடிவேலன் தெருவில் வசித்து வருபவர் சரவணக்குமார். இவர் மண்பானை தொழில் செய்து வருகிறார். இவரது மகள் நிர்மலா (15). இவர் அப்பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-1 படித்து வருகிறார். இதே தெருவில் மருதுபாண்டி என்பவரின் குடும்பமும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சரவணக்குமார் எதிர் வீட்டில் வசித்து வந்தனர்.
அப்போது சரவணக்குமாரின் மகளுக்கு, மருதுபாண்டியின் மகன் மணிரத்னம் (23) காதல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் தந்தை சரவணக்குமார், ஆரம்ப கட்டத்திலேயே மணிரத்னத்தை கண்டித்துள்ளார். ஆனால், மணிரத்னத்தின் தொந்தரவு நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருந்ததால் சரவணக்குமார் காவல் நிலையத்திற்கு சென்றார்.
அதன் பின்னர் பிரச்னை வேண்டாம் என நினைத்து மருதுபாண்டி குடும்பத்தினர் வீட்டை காலி செய்து சின்னக்கண்மாய் பகுதியில் குடிபெயர்ந்தனர். இதனிடையே திருட்டு, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பங்களில் ஈடுபட்ட காரணத்தினால் சிறை சென்ற மணிரத்னம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்த நிலையில், பழைய குற்ற வழக்குகளுக்காக நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது தனது ஒருதலை காதலை நினைத்து வருந்தியுள்ளார். போதை தலைக்கேறியவுடன் அதே ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து சரவணக்குமாரின் வீட்டிற்கு சென்ற மணிரத்னம் வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றுள்ளார். வாசலில் அந்த நேரத்தில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது, வெடிகுண்டு வீசப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த சரவணக்குமார் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 மணி நேரத்தில் மணிரத்னம் மற்றும் அவரது நண்பர் பார்த்தசாரதி (22) ஆகிய இருவரை கைது செய்து, மேலும் தப்பியோடிய 2 நண்பர்களை தேடி வருகின்றனர்.