பெண் குளித்ததை வீடியோ எடுத்து மிரட்டிய ப்ளஸ்-1 மாணவன்.. உடந்தையாக இருந்த தந்தை.. திருகோவிலூரில் பரபரப்பு

 
video

திருக்கோவிலூர் அருகே திருமணமான பெண் குளித்ததை வீடியோ எடுத்து ப்ளஸ்-1 மாணவன் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. கணவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் உள்ள குளியலறையில் குளித்து கொண்டிருந்தார். இதை அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய ப்ளஸ்-1 மாணவன் மறைந்திருந்து பார்த்ததோடு, அதனை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளான்.

பின்னர், அந்த வீடியோவை அப்பெண்ணிடம் காண்பித்து தனது ஆசைக்கும், தனது நண்பர்களின் ஆசைக்கும் இணங்க வேண்டும். இதற்கு மறுத்தால் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பி விடுவேன். மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று அந்த பெண்ணை மாணவன் மிரட்டியதாக தெரிகிறது.

Fight

இதுகுறித்து அந்த பெண் தனது கணவரிடமும், உறவினர்களிடம் கூறியுள்ளார். இதைகேட்டு, அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சம்பந்தப்பட்ட அந்த மாணவனை கண்டித்துள்ளனர். இருப்பினும் அந்த மாணவன், இளம்பெண் குறித்து தவறாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளான். மேலும் அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து உன்னை அசிங்கப்படுத்திவிடுவேன் என்று அப்பெண்ணிடம் கூறி மீண்டும் அவரை மிரட்டியுள்ளான்.

இதுகுறித்து அந்த பெண் திருக்கோவிலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவனை தேடி வந்தனர். இதுகுறித்து அறிந்த அம்மாணவனின் தந்தை கோவிந்தன் (36) என்பவர் ஆத்திரத்தில் மாணவன் எழுதிய அந்த கடிதத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

Tirukoilur Women PS

இதுகுறித்து அறிந்ததும் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் கோவிந்தன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மாணவனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web