இன்று ப்ளஸ்-1 பொதுத்தேர்வு தொடக்கம்.. 3,302 மையங்களில் தேர்வு எழுதும் 8.20 லட்சம் மாணவ மாணவிகள்!

 
Exam

தமிழ்நாடு முழுவதும் இன்று (மார்ச் 4) ப்ளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்குகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ்-2 வகுப்பு மாணவ - மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ப்ளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்க இருக்கிறது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள், 4 லட்சத்து 30 ஆயிரத்து 471 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 பேர் எழுத உள்ளனர்.

Exam

இதுதவிர தனித்தேர்வர்களாக 5 ஆயிரம் பேரும், சிறைவாசிகள் 187 பேரும் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 3,302 தேர்வு மையங்களில் ப்ளஸ்-1 பொதுத்தேர்வை மாணவ - மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.

தேர்வில் முறைகேடுகளை தடுக்க 3,200 பறக்கும் படை அதிகாரிகளும், தேர்வு பணிகளில் 46 ஆயிரத்து 700 தேர்வறை கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

Exam

முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடக்க இருக்கிறது. இன்று தொடங்கும் தேர்வு வருகிற 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

From around the web