வெளியானது ப்ளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள்.. 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி!

 
Results

தமிழ்நாட்டில் ப்ளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளயாகி உள்ள நிலையில், 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற ப்ளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7,534 பள்ளிகளை சேர்ந்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள், 4 லட்சத்து 3 ஆயிரத்து 471 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவர்கள் எழுதினர். இதுதவிர, 5 ஆயிரம் தனித்தேர்வர்களும், 187 சிறை கைதிகளும் ப்ளஸ்-1 தேர்வை எழுதினார்கள்.

Exam

இந்த நிலையில், இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட்டது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்வுத்துறை அதிகாரிகள் இந்த ஆண்டு தேர்வு முடிவை வெளியிட்டனர். மொத்தம் 91.17 சதவீதம் பேர் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 241 அரசுப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மொத்தம் 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 பேர் தேர்வு எழுதிய நிலையில் இதில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ப்ளஸ்-1 தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் www.tnresult.nic.in, www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில், பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

Exam

பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

From around the web