வளைகாப்புக்காக ஊருக்கு சென்றபோது பரிதாபம்.. ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி!

 
Chennai

உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து நேற்று மாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், உடனடியாக பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர் ரயிலில் இருந்து இறங்கிய உறவினர்கள், கர்ப்பிணி தவறி விழுந்த இடம் நோக்கி ஓடிச் சென்று பார்த்தனர். ஆனால் அங்கு கர்ப்பிணி கிடைக்கவில்லை.

பின்னர் அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டு, விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு வந்தது. அதாவது இரவு 8.10 மணிக்கு வர வேண்டிய ரயில், 20 நிமிடம் தாமதமாக இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தது. ரயிலில் இருந்து இறங்கிய கர்ப்பிணியின் உறவினர்கள் கதறி அழுதனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

train-suicide

அப்போது அவர்கள், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி கஸ்தூரி என்ற 7 மாத கர்ப்பிணி பெண் தவறி விழுந்து விட்டதாகவும், அவரை உடனடியாக மீட்டு தருமாறும் கூறினர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று கஸ்தூரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கஸ்தூரி இறந்து கிடந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

போலீசார் விசாரணையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீழிதநல்லூர் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (25). இவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி. நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி (22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனிடையே மேலநீழிதநல்லூரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்க செல்வதெனவும், அங்கேயே நாளை மறுநாள் (மே 5) கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்தவும் உறவினர்கள் திட்டமிட்டனர்.

Virudhachalam Rly PS

அதன்படி கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்கு செல்ல சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அந்த ரயிலில் எஸ்-9 பெட்டியில் அனைவரும் பயணம் செய்தனர். இந்த ரயில் இரவு 8 மணி அளவில் உளுந்தூர்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, கஸ்தூரிக்கு வாந்திக்கான அறிகுறி ஏற்பட்டது.

உடனே அவர், தனது உறவினர்கள் உதவியுடன் எஸ்-9 பெட்டியில் உள்ள கை கழுவும் இடத்திற்கு வந்தார். அந்த இடத்தில் வாந்தி எடுத்தபடி கஸ்தூரி நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாகவும், அபாய சங்கில் செயல்படாத புகார் குறித்து விசாரிக்கவும் தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.

From around the web