சென்னையில் 16 இடங்களில் ‘பிங்க்’ நிறத்தில் வாக்குசாவடிகள்.. என்ன ஸ்பெஷல்? யார் யார் ஓட்டு போடலாம்

 
Pink Booth

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்காக சென்னையில் 16 இடங்களில் பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 18-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும்  புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை (ஏப்ரல் 19) தேர்தல் நடைபெறுகிறது. பொதுமக்கள் ஓட்டுப்போட வசதியாக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Election

நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் சிரமமின்றியும் கால தாமதமின்றியும் ஓட்டு போடுவதற்கு வசதியாக 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 3,726 வாக்குச்சாவடிகள் 944 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 685 பதற்றமான வாக்குச்சாவடிகளும், 23 மிகவும் பதற்றமான வாக்குச்சாடிகளும் என 708 வாக்குச்சாவடிகள் இதில் அடங்கும்.

இந்த நிலையில், சென்னையில் 16 இடங்களில் பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருபவர்கள் மற்றும் மூதாட்டிகளுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பிரத்யேக வசதிகளுடன் உதவி மையம், முதியோர் ஓய்விடம், குழந்தைகள் விளையாடும் இடம், சாய்தளம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Pink Booth

இங்கு பணியாற்றும் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் என அனைவரும் பெண்களே. கோடை வெயிலில், பெண்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க சிரமப்படுவார்கள் என்பதால் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்தாலும், இங்கு அனைவரும் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web