பிடிஆர் பழனிவேல் வேறு துறைக்கு மாற்றம்.. உடனே போட்ட அதிரடி ட்வீட்!!

 
PTR

நிதித்துறை இலாகாவிலிருந்து தகவல் தொழில்நுட்பம் அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீதிக் கட்சியின் தலைவரும் சென்னை மாகாணத்தின் முன்னாள் பிரதமர் பி.டி. ராஜனின் பேரனும் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் மகனுமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டார்.

2006-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தபோது, பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரானார். ஆனால், பதவியேற்று மதுரைக்குத் திரும்பும் வழியிலேயே அவர் மரணமடைந்தார். அந்தத் தருணத்திலேயே அவரது மகன் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை அவரது தந்தையின் தொகுதியான மதுரை மத்தியத் தொகுதியில் போட்டியிடும்படி திமுக தலைவர் மு.கருணாநிதி வலியுறுத்தினார். ஆனால், அந்த சமயத்தில் அவர் அதனை ஏற்கவில்லை.

PTR

அதன் பிறகு 2016-ல் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மத்தியத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பிறகு, மீண்டும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மதுரை மத்தியத் தொகுதியில் போட்டியிட்ட பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அதில் வெற்றிபெற்றார். திமுகவின் அமைச்சரவையில் நிதியமைச்சர் என்ற முக்கியப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் நிதித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, மிக மோசமான நிலையில் இருந்த நிதித்துறையை மேம்படுத்த அவர் எடுத்த நடவடிக்கைகள் மிகுந்த கவனத்தைப் பெற்றன. பாராட்டுதல்களையும் பெற்றன. ஆனால், அதே நேரம் அரசின் பல்வேறு துறைகளுக்கு அவர் நிதியை விடுவிப்பதில் தாமதம் செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.


இந்த நிலையில், நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். அமைச்சரவை மாற்றம் தொடர்பான பட்டியல் வெளியானதும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

அதில், “கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web