மூப்பனார் நினைவு நாளில் பங்கேற்பு.. அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக? அசராமல் அரசியல் செய்யும் பிரேமலதா விஜயகாந்த்!!
விஜயகாந்த் உடல் நலிவுற்று இருந்த நிலையில் தேமுதிகவும் தொய்வடைந்துப் போனது. நீண்ட நாட்களாக உடல்நலம் இல்லாமல் இருந்ததால் விஜயகாந்தால் கட்சி நிர்வாக நடவடிக்கையில் ஈடுபட முடியவில்லை. அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் தும் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்ட முடியாத நிலையில் இருந்தார். பிரேமலதாவின் தம்பி சுதீஷ் தான் கட்சிப் பணிகளை ஓரளவுக்கு பார்த்து வந்தார். தலைமையின் நேரடி செயல்பாடு இல்லாவிட்டால் எந்தக் கட்சியும் தொய்வடையத்தானே செய்யும்!
விஜயகாந்த்தின் மறைவுக்குப் பிறகு தேமுதிக காணாமல் போய்விடும் என்றே பலரும் கணித்து இருந்தனர். விஜயகாந்தின் மகன் விருதுநகர் தொகுதியில் தோற்றுப்போனதும் கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. மாநிலங்களவையில் ஒரு சீட் தருவதாக வாக்குறுதி கொடுத்த எடப்பாடி பழனிசாமியும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு வரும் மாநிலங்களவைத் தேர்தல் என்று போக்கு காட்டிவிட்டார். இது கட்சித் தலைமை மீது தொண்டர்களுக்கு சோர்வை ஏற்படுத்தியது. விஜயகாந்த் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என்று தொண்டர்கள் மத்தியில் பேச்சு எழத் தொடங்கியது.
இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்தின் அரசியல் நடவடிக்கைகள் அனைவரையும் உற்றுப்பார்க்க வைத்தது. எடப்பாடி எங்களுக்கு அளித்த உறுதிமொழி எழுத்துப் பூர்வமாக இருக்கிறது. ஆனால் அரசியல் நாகரீகம் கருதி அதை நாங்கள் வெளியிட மாட்டோம் என்று சொன்ன போது பிரேமலதா மீது ஆச்சரியப் பார்வை விழ ஆரம்பித்தது.
பாஜக - அதிமுக கூட்டணி உருவான நிலையில் தேமுதிக எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி சொன்ன போது, கூட்டணி குறித்த முடிவை கட்சி மாநாட்டிற்குப் பிறகு ஜனவரி மாதம் தான் முடிவு செய்வோம் என்று சொன்னதுடன் இன்று வரையிலும் உறுதியாக இருக்கிறார். எந்த ஒரு நெருக்கடிக்குள்ளும் சிக்காமல் இருப்பதே தொண்டர்கள் மத்தியிலும் பிரேமலதா மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி வளர்ச்சியில் அக்கறை காட்டி வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதும் முதல் ஆளாகச் சென்று நலம் விசாரித்து வந்தார் பிரேமலதா. கூட்டணி சாயம் பூச முயற்சித்தவர்களுக்கு கேப்டனுடன் நட்பு கொண்டவர், அடிக்கடி கேப்டனை நலம் விசாரித்துச் சென்றவர். துணை முதல்வர் உதயநிதியும் கேப்டனிடம் ஆசி பெற்றுச் சென்றே பதவி ஏற்றார். அந்த அடிப்படையில் முதலமைச்சரின் உடல்நலம் பற்றி கேட்கவே வந்தோம் என்று பிரேமலதா சொன்ன போது ஊடகங்கள் அவரை உற்று நோக்க ஆரம்பித்தன.
அதே போல் தற்போது மூப்பனார் நினைவு நாளில் தேமுதிக சார்பில் பங்கேற்றதற்கும், மூப்பனாருக்கும் கேப்டனுக்கும் 40 ஆண்டு கால நட்பு. அந்த அடிப்படையிலேயே நினைவு நாளில் பங்கேற்றோம் என்று கூறி விட்டார். தேமுதிக எங்கள் அணிக்கு வந்துவிடும் என்று பேசிய தமிழிசை சவுந்திரராஜனுக்கு பிரேமலதாவின் இந்த பதில் வேப்பங்காய் போல் கசக்கத் தான் செய்யும்.
அதோடு மட்டுமல்லாமல், மாநிலங்களவை சீட் தருவதாக கூறி முதுகில் குத்தி விட்டார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டார். அதனால்தான் நாம் ஏமாந்துவிட்டோம் என்றும் கூறியுள்ளார் பிரேமலதா.
எங்க கட்சி மாநாட்டு முடிந்த பிறகு நாங்க ஜனவரியில் தான் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறார் பிரேமலதா. பாஜகவின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து கூட்டணி அறிவித்த எடப்பாடி பழனிசாமியை விடவும் வலிமையான தலைவராக தேமுதிக தொண்டர்கள் பிரேமலதாவை கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.
விஜயகாந்தை நடிகர் விஜய் சொந்தம் கொண்டாடிப் பேசியதற்கும் தக்க பதிலைத் தந்து, தேர்ந்த அரசியல்வாதியாக விஜய் யை நோக்கி சரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பிரேமலாதாவின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் மற்றுமொரு பெண் தலைவர் உருவாகிவிட்டார் என்ற எண்ணத்தையே உருவாக்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் சரியான முடிவெடுத்து கட்சிக்கு மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுத் தந்தால் பிரேமலதா தமிழ்நாட்டின்மற்றுமொரு சக்தியாக உருவெடுப்பார்
- ஸ்கார்ப்பியன்
