நாடாளுமன்ற தேர்தல்.. வாக்களிக்க வரிசையில் நின்ற 3 பேர் மயங்கி விழுந்து பலி!
தமிழ்நாட்டில் வெவ்வேறு தொகுதிகளில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றிருந்தவர்களில் 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37 சதவீத வாக்குகளும், புதுச்சேரியில் 27.63 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. இதே போல் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 17.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் வாக்களிக்க சென்ற இருவர் வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அதேபோல் சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து திருத்தணியை அடுத்த நெமிலி கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (59) என்ற முதியவர் வாக்குசெலுத்த வரிசையில் காத்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.