நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகள் ஒதுக்கீடு.. பாஜக - பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்து

 
PMK - BJP

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக மற்றும் பாமக இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி, வேட்புமனுத் தாக்கல் வரும் மார்ச் 20-ம் தேதி ஆரம்பிக்கிறது. எனவே கூட்டணியை இறுதிசெய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன.

Election commission

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக பாமக அறிவித்துள்ளது. திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற பாமக உயர்மட்ட குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், தேசிய நலன், மக்கள் நலன் மற்றும் பாமகவின் எதிர்காலத்தை கருதி பாஜகவுடன் கூட்டணி அமைக்க பாமக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

PMK - BJP

இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக மற்றும் பாமக இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தம் கையெழுத்தானதுபோது ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் மாற்றம்  ஏற்படுவதற்காக இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி 10 இடங்களில் போட்டியிடும். பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். மக்களை நம்பி வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

From around the web