குடிபோதைக்கு அடிமையான மகனை அடித்தே கொன்ற பெற்றோர்.. பொத்தி வச்ச ரகசியம் மயானத்தில் உடைந்தது!!

 
Saravanan

மதுரை அருகே மதுபோதைக்கு அடிமையான மகனை பெற்றோர் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி அருகே உள்ள உவரி கிராமத்தை சேர்ந்தவர் சப்பானி (எ) தவிடன். இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் 3 மகள்களுக்கு திருமணமான நிலையில் அனைவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர். மேலும் மூத்த மகன் சங்கனுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.

இளைய மகன் சரவணன் மட்டும் பெற்றோருடன் வசித்து வருகிறார். சரவணன் கடந்த சில வருடங்களாகவே மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தனது தாய் - தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவ்வப்போது சண்டை நடந்துள்ளது. அடிக்கடி பணம் கேட்டு தாயை தாக்கி உள்ளார். மேலும் தாய் காளியம்மாள் வளர்த்து வந்த செம்மறி ஆடுகளை தூக்கிச் சென்று பாதி விலைக்கு விற்று குடித்து வந்துள்ளார்.

Madurai

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் சரவணன் குடிப்பதற்காக மீண்டும் தனது தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து மூத்த மகன் சங்கனுக்கு பெற்றோர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சங்கனும் உவரி கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். தொடர்ந்து, சரவணன் பணம் கேட்டு மூவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். குடும்பத்தார் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சரவணன் ஆடு மேய்க்கும் கம்பால் மூவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் மூத்த மகன் சங்கனும் தந்தை தவிடனும் சேர்ந்து சரவணனின் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டனர். தாய் காளியம்மாள் கொண்டுவந்த துண்டை வைத்து சரவணனின் கைகளை பின்னால் கட்டி வைத்துள்ளனர். தொடர்ந்து மது போதையின் உச்சத்திலிருந்த சரவணன் குடும்பத்தினரை திட்டியதால் ஆத்திரம் அடைந்த மூத்த மகன் சங்கன் ஆடு மேய்க்க வைத்திருந்த கம்பை எடுத்து கால் மற்றும் தலையில் தாக்கியுள்ளார்.

மேலும் தந்தை தவிடன் மற்றும் தாய் காளியம்மாள் இருவரும் இரும்பு பைப்பால் சரவணனின் தலைப்பகுதியில் தாக்கியுள்ளனர். இதில் சரவணன் மயக்கமடைந்ததாக எண்ணி மூவரும் தூங்க சென்று விட்டனர். இந்நிலையில் காலையில் எழுந்து வந்த தாய் காளியம்மாள் மயங்கி நிலையில் இருந்த மகன் சரவணனை எழுப்ப முயற்சி செய்துள்ளார். நீண்ட நேரமாக கண் விழிக்காததால் அதிர்ச்சியடைந்த காளியம்மாள் உடனடியாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் மற்றும் மூத்த மகனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மூவரும் தாங்கள் தாக்கியதில் சரவணன் இறந்து விட்டதாக தெரிகிறது. அதில் பயந்து போன மூவரும் ஊர் மக்களை நம்ப வைப்பதற்காக தனது மகன் போதையில் யாரிடமோ சண்டையிட்டு அடிவாங்கி வந்து வீட்டின் முன்பு இறந்து கிடப்பதாகவும் கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர்.

Police-arrest

தொடர்ந்து, போலீசாருக்கு தெரிந்தால் தனது மகன் சரவணனின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்து தருவார்கள் எனவே இது குறித்து யாருக்கும் தெரிய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து சரவணனின் உடலை தகனம் செய்வதற்கு சுடுகாட்டில் வைத்து பெற்றோர்கள் மூத்த மகன் ஆகியோர் எரித்து தகனம் செய்துள்ளனர். சரவணன் இறந்தது குறித்து தகவல் அறிந்து வந்த மகள்கள் 3 பேரும் பெற்றோர் மற்றும் அண்ணனிடம் கேட்டுள்ளனர். அதற்கு நடந்த அனைத்தையும் மகள்களிடத்தில் கூறியுள்ளனர். உடனே உண்மையை கூறி காவல் நிலையத்தில் சரணடையுங்கள் என கூறியுள்ளனர்.

காவல் நிலையத்திற்கு செல்ல பயந்த மூவரும் கிராம நிர்வாக அலுவலரிடம் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார்கள். சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தாமாக முன்வந்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டுள்ளனர். நடந்த சம்பவம் அனைத்தையும் கிராம நிர்வாக அலுவலர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் அளித்த தகவலின் பெயரில் வழக்குப்பதிவு செய்து உவரி கிராமத்திற்கு சென்று சம்பவ இடத்திற்கு போலீசார் நேரில் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தாய் தந்தை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

From around the web