பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு.. பிரதமர் மோடி வருகிறாரா?

ராமேஸ்வரத்திற்கும் மண்டபத்திற்கும் இடைப்பட்ட பழைய பாம்பன் ரயில் பாலம் பழுதுபட்ட நிலையில் சுமார் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. பழைய பாலம் போலவே ரயில் செல்லாத நேரத்தில் படகுகள் செல்வதற்கு ஏதுவாக உயரமாகத் தூக்கி நிறுத்தப்படும் வகையிலான இந்தப் பாலம் இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் உள்ளது.
புதிய ரயில் பாலத்தை ஏப்ரல் 6ம் தேதி திறந்து வைக்க பிரதமர் மோடி வருவார் என எதிர்பார்ப்பதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறியுள்ளார்.
”ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் மோடி ராமேஸ்வரத்திலிருந்து புதிய ரயில் சேவையைத் தொடங்கி வைக்கும் வாய்ப்புகள் உள்ளன. ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே விழாவுக்கான மேடை அமைக்கப்படும். விழாவில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
ராமேஸ்வரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முழுமையாக நிறைவடைந்துவிடும். மேலும், பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்றுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்” என்று கூடுதல் தகவல்களையும் பகிர்ந்தார் ஆர்.என்.சிங்.
ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே புதிய ரயில் பாதை அமைப்பது குறித்து கேட்ட போது, சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினை இருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய ரயில் பாதைக்கான நிலங்களைக் கையப்படுத்த வேண்டும். இதனால், தனுஷ்கோடிக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தாமதமாகும் என்று ஆர்.என்.சிங் கூறியுள்ளார்.
புதிய பாம்பன் ரயில் பாலம் திறக்கப்படும் ஏப்ரல் 6ம் தேதி ராம நவமி என்பது குறிப்பிடத் தக்கது.