ஆக்கிரமிப்பு வீட்டை இடிக்க எதிர்ப்பு.. கும்மிடிப்பூண்டியில் தீக்குளித்த இளைஞர் பரிதாப பலி!

 
Gummidipoondi Gummidipoondi

கும்மிடிப்பூண்டியில் ஆக்கிரமிப்பில் உள்ள வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி பகுதியை சேர்ந்தவர் கல்யாணி. இவரது வீடு ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கடந்த 4-ஆம் தேதி  ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது கல்யாணியின் மகன் ராஜ்குமார் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால், திடீரென வீட்டிற்கு சென்று தாழிட்டு உடலில் பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து கொண்டு ராஜ்குமார் தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்த போது, உடலில் தீப்பற்றிய நிலையில், ராஜ்குமார் அலறியடித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். உடனடியாக போலீசார் தீயணைப்பு கருவி உதவியுடன் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து அருகில் இருந்த கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர்.

Gummidipoondi

ராஜ்குமாரின் உடலில், 50 சதவீதம் தீக்காயம் இருந்ததால் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

dead-body

இதனிடையே இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய ஷர்மா ஆகியோரை பணியிட மாற்றம் செய்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web