மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.. அரசு கலை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

 
college

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மீண்டும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின்கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இதன் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இணையவழியில் கடந்த மே 5-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி நிறைவுபெற்றது. அதன் பின்னர் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கைப் பணிகளும் நடைபெற்றது.

College Students

இந்த சூழலில், தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மீண்டும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். ஜூலை 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2 சுற்றுக் கலந்தாய்வு முடிவில் 63 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேட விரும்பும் மாணவர்கள் www.tngasa.in எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் https://www.tngasa.in/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியம். விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினர் ரூ.50, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.2 செலுத்த வேண்டும்.

DCE

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்காக சேர்க்கையை, கல்லூரிகள் ஜூலை 8-ம் தேதி முதல் மேற்கொள்ள வேண்டும் என்றும், கல்லூரியில் மாணவர்கள் கோரும் பாடப் பிரிவுகள் காலியாக இருந்தால், கல்லூரி முதல்வர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

From around the web