ஆன்லைன் ரம்மியால் ரூ. 20 லட்சம் கடன... மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை!! தாம்பரத்தில் சோகம்!!

 
Chennai

தாம்பரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் கணபதி காலனி பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (36). இவர், பி.பார்ம் படித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லதா (36). இவர், தாம்பரத்தில் உள்ள தனியார் மருந்து கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள். இவர்களுடன் வினோத்குமாரின் தாயார் தமிழ்ச்செல்வியும் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், வினோத்குமார் ஆன்லைன் செயலிகள் மூலம் சுமார் ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கி இருப்பதாகவும், அதனை சரியாக செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் லதா வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் வினோத்குமார், அவருடைய தாய் தமிழ்ச்செல்வி மற்றும் 2 மகன்கள் மட்டும் இருந்தனர். 

அப்போது வினோத்குமார், தனது தாய் தமிழ்ச்செல்வியிடம் கடைக்கு சென்று மகன்களுக்கு தின்பண்டம் வாங்கி கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தார். தமிழ்ச்செல்வி கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது வினோத்குமார் இல்லை. பேரன்களிடம் கேட்டபோது, அவர் படுக்கை அறையில் தூங்க சென்று விட்டதாக தெரிவித்தனர். ஆனால் இரவு ஆகியும் வினோத்குமார் படுக்கை அறையில் இருந்து வெளியே வரவில்லை.

Suicide

இதனால் சந்தேகம் அடைந்த தமிழ்ச்செல்வி, நீண்டநேரம் கதவை தட்டியும் வினோத்குமார் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது படுக்கை அறையில் தனது மகன் வினோத்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலையூர் போலீசார், தூக்கில் தொங்கிய வினோத்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முன்னதாக வினோத்குமார் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், “எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள். ஊரை சுற்றி எனக்கு கடனாகிவிட்டது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இருந்து என்னால் மீண்டு வர முடியவில்லை. என் சாவு தான் இந்த ரம்மியில் கடைசியாக சாவாக இருக்க வேண்டும். தயவு செய்து அதை தடை செய்யுங்கள்” என எழுதி இருந்ததாக அவருடைய மனைவி லதா கூறினார்.

Selaiyur PS

இதுபற்றி சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான வினோத்குமார், அதில் பணம் இழந்ததால் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்கினார். அந்த பணத்தையும் சூதாட்டத்தில் இழந்தார். இதனால் வாங்கிய கடனை அடைக்க மேலும் கடன் வாங்கி உள்ளார். இவ்வாறு ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கிய அவர், ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கடன் தொகையை கேட்டு ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் கொடுத்த நிறுவனத்தினர் வினோத்குமாருக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

From around the web