ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல்... அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

 
Raghupathy

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 5 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் மாதாந்திர உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

Rummy

மேலும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பிய நிலையில், இவ்விவகாரம் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக எதிர்ப்பார்க்கப்பட்டது. இவைதவிர ஏற்கெனவே செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களுக்கான விரிவாக்கத்துக்கும் நிதி ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சரவை கூட்டம் முடிவடைந்த பின்னர் சட்டத்துறை அமைசர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை பேரவையில் நிறைவேற்றி மீண்டும் கவர்னருக்கு அனுப்ப அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை மாநில அரசு தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி இருப்பது ஏற்புடையது அல்ல. 

MKS

சட்டம் இயற்ற சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளதால், சட்டப்பேரவையில் சட்டம் மீண்டும் நிறைவேற்றப்படும். சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என நீதிமன்றமே கூறியுள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்ல தேவையில்லை. 2-வது முறை அனுப்பும் மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டால், அது குறித்து பின்னர் ஆலோசிக்கப்படும். 

ஆன்லைன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு எவ்வித வருவாயும் வரவில்லை. மக்களின் நலனுக்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் கூட்டத்தொடரிலேயே ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும்.” என்று கூறினார்.

From around the web