அதிமுக - பாஜக கூட்டணியில் மேலும் ஒரு விக்கெட் அவுட்? டிசம்பரில் தான் கூட்டணி அறிவிப்பு என்று முழங்கும் டி.டி.வி தினகரன்!!

 
ttv dhinakaran ttv dhinakaran

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறார். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று தெரிவித்தார். அதே நாளில் நெல்லையிலிருந்து 60 கிலோ மீட்டர் மேற்கே தென்காசியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி,வி தினகரன் டிசம்பரில் தான் கூட்டணி பற்றி முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார்.

இது வரையிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று கூறி வந்த டி.டி.வி தினகரன், டிசம்பரில் தான் முடிவு செய்வோம் என்று கூறியிருப்பது தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி சசிகலாவுடன் சமாதானமாகச் செல்ல முடிவு செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் டி.டி.வி தினகரனின் இந்த அறிவிப்பு  அதிமுக கூட்டணிக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது

ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி அரசியலில் அவருடைய செல்வாக்கை அழித்தது போல், தன்னுடைய செல்வாக்கையும் ஒட்டுமொத்தமாக பாஜக அழித்து விடும் என்ற எண்ணத்தில் தான் டி.டி.வி தினகரன் யு.டர்ன் அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய் கட்சியுடன் ஓ,பி.எஸ் கூட்டணி பற்றி பேச்சு வார்த்தை நடத்திவருகிறார் என்று கூறப்படும் நிலையில், டி.டி.வி தினகரனும் விஜய் கட்சி பக்கம் சாய்ந்து விடக்கூடும் என்றும் கருதப்படுகிறது.  தங்கள் சொந்த செல்வாக்குடன் விஜய் ரசிகர்கள் சேரும் போது தென்மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்று ஓ.பி.எஸ்ஸும் டி.டி.வி தினகரனும் கணக்குப் போடுவதாகக் கூறப்படுகிறது.

”அமமுக தொண்டர்கள், நிர்வாகிகளின் மன ஓட்டத்தை தெரிந்து கொண்டு அமமுகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதத்தில்தான் முடிவு எடுப்போம். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அமமுக யார் என்பதை நிரூபிப்போம். தொகுதி தோறும் சென்று நிர்வாகிகளை சந்தித்து தேர்தலுக்கு தயார் செய்து வருகிறோம். அப்போதுதான் அமமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது தெரியும். 

கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமராக மோடி வர வேண்டும் என்பதற்காக நிபந்தனையற்ற ஆதரவை அமமுக கொடுத்தது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தல் என்பது வேறு. இந்த தேர்தலில் அமமுக நிலைப்பாட்டை டிசம்பரில் நிச்சயம் வெளிப்படையாக தெரிவிப்போம். மக்கள் விருப்பப்படி அமமுக கூட்டணி அமைக்கும். நிர்வாகிகள் தொண்டர்களின் கருத்தின் அடிப்படையில் தான் முடிவெடுக்க முடியும் என்று தென்காசியில் டி.டி.வி தினகரன் கூறியிருக்கிறார். 

அதிமுக - பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான முதல் படி தான் இந்த செய்தியாளர் சந்திப்பு என்று கூறப்படுகிறது.  அதிமுக - பாஜக கூட்டணியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகிவிட்ட நிலையில், டி.டி,வி தினகரனின் இந்த அறிவிப்பால் புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

From around the web