ஆம்னி பேருந்து லாரி மீது மோதி விபத்து.. 2 பேர் உடல் நசுங்கி பலி.. 20 பேர் படுகாயம்!
உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து நேற்று இரவு பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து அறந்தாக்கி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சென்டர் மீடியனில் மோதி எதிர்திசையில் சென்றது.
அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது சொகுசு பேருந்து நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆம்னி சொகுசு பேருந்து அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள் இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 20 பயணிகள் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.