ஓலா, ஊபர் வாகன ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. வாடிக்கையளர்கள் தவிப்பு!

 
OLA

கட்டண உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர் கால் டாக்சி ஓட்டுநர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஓலா, ஊபர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் அடிப்படையில் ஆயிரக்கணக்கானோர் கால் டாக்ஸி சேவை வழங்கி வருகின்றனர். கார் ஓட்டுநர்களுக்கு ஓலா, ஊபர் ஆகிய நிறுவனங்கள் வழங்கும் ஊதியம் போதுமான இல்லை, கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும், கார் ஓட்டுநர்கள் புகார் தெரிவிருக்கின்றனர். மேலும், பைக் டாக்சி முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கால் டாக்சி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

booking

இதனை வலியுறுத்தி, இன்று முதல் 3 நாட்களுக்கு வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இன்றும் நாளையும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடும் கால் டாக்சி ஓட்டுநர்கள், வரும் 18ம் தேதி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். இதனால், 3 நாட்களுக்கு சென்னையில் கால் டாக்சி சேவை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தவித்தனர்.

வேலைநிறுத்த போராட்டம் குறித்து கார் ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், “ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.9 - 12 மட்டுமே நிர்ணயித்துள்ளனர். இது ஆட்டோக்களுக்கு அளிக்கப்படும் கட்டணத்தை விட குறைவாகவே உள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.18 வரை உயர்த்தி வழக்க வேண்டும் எங்களது கோரிக்கையாக உள்ளது. பயனாளர்கள் ரைட் ரத்து செய்யும்போது அவர்களிடமிருந்து ‘Cancel fee’ வசூலிக்கிறார்கள். ஆனால், நிறுவனமே அதை மொத்தமாக எடுத்துகொள்கிறது. அதிலிருந்து ஒரு பங்கு தொகை கூட எங்களுக்கு வருவதில்லை. குறைந்த ஊதியத்தில் எப்படி வேலை செய்ய முடியும்?” என்று அவர்களின் சூழலை விளக்கியுள்ளார். 

OLA

பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும், வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆட்டோக்களுக்கு மீட்டர் வழங்க வேண்டும், வணிக வாகனங்களை இயக்க பேட்ஜ் உரிமம் பெற வேண்டாம் என்ற அறிவிப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை எழும்பூர் அருகே கார் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன் கால் டாக்ஸி சேவையில் முறைப்படுத்தும் வகையில் வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளனர்.

From around the web