இனி இதுதான் ‘டிரஸ் கோட்’.. தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுபாடு விதிப்பு!

 
Thanjavur

தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010-ம் ஆண்டு கட்டி முடித்து குடமுழுக்கு நடத்தினார். இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்வதோடு, இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

Thanjavur

இந்த கோவிலில் சதய விழா, நவராத்திரி கலை விழா, சித்ரா பவுர்ணமி விழா, ஆஷாட நவராத்திரி விழா, ஐப்பசி மாத அன்னாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பெரிய கோவிலுக்கு வரும் வெளிநாட்டினர், வெளிமாநில பக்தர்கள் ஆண்களும், ஒரு சில பெண்களும் அரைக்கால் சட்டை அணிந்து வருகின்றனர். இதனால் மற்ற பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. இதை தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ‘டிரஸ்கோடு’ என்ற ஆடை கட்டுப்பாட்டு அறிவிப்பு பலகையை கோவில் நுழைவு வாயில், காலணி பாதுகாக்கும் இடம் என 2 இடங்களில் நேற்று முதல் வைக்கப்பட்டுள்ளது.

Thanjavur

அதில் “ஆண்கள் வேட்டி, சட்டை, பேண்ட் அணிந்தும், பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் ஆகியவை அணிந்து வர வேண்டும்” என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையை பார்த்த சமூக ஆர்வலர்கள், இது வரவேற்கத்தக்கது என்றும் பக்தர்களும் இதை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

From around the web