துணை முதல்வர் பதவி அல்ல.. பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின் ட்விட்!

 
Udhayanidhi Stalin

தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்களுடன் தமிழ்நாடு அமைச்சரவை இயங்கி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாடு துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். இதனை தொடர்ந்து, தமிழ்நாடு துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்கிறார். இதன்பின்னர், இன்று முதல் துணை முதல்வர் பொறுப்பை உதயநிதி ஸ்டாலின் கவனிப்பார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்  அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Deputy CM

இதுகுறித்து துணை முதல்வர் பதவி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், முதலமைச்சர் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம். அன்பும், நன்றியும்!” என்று தெரிவித்துள்ளார்.


துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

இவர்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டதையடுத்து திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னையில், பல்வேறு இடங்களில் நேற்று இரவு திமுக முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.

From around the web