சென்னையில் வடமாநில கொள்ளையர்கள்... இதிலேயும் அரசியலா?

சென்னையில் ஒரே நாளில் பல இடங்களில் செயின் பறிப்பு நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பிச் சென்ற கொள்ளையர்களை வெகு விரைவாக செயல்பட்டு 4 மணி நேரத்தில் பிடித்துள்ளனர் சென்னை போலீசார். விமானத்தில் தப்பிச் சென்ற இருவரை மடக்கிப் பிடித்துள்ளனர். அதே போல் ரயிலில் தப்பிச் சென்ற ஒருவனையும் பிடித்து கைது செய்துள்ளனர்.
விமானம் புறப்பட சில நிமிடங்களே இருந்த நிலையில் விமானத்திற்குள்ளே சென்று கைது செய்யப்பட்டது சென்னை வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும். பயணிகளுக்கு எந்தவித குழப்பமோ, விமானத்திற்குள் பரபரப்போ ஏற்படாமல் வெகு இலாவகமாக கையாண்டு கைது நடந்துள்ளதாக விமானத்தில் பயணம் செய்த முன்னாள் அதிமுக நிர்வாகி அஸ்பையர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.
பிடிபட்ட கொள்ளையன் ஜாபர் குலாம் உசேன் இரானியை போலீசார் அழைத்துச் சென்று பயன்படுத்திய பைக்கை கைப்பற்றச் சென்ற போது பைக்கில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட்டுள்ளான். தற்பாதுகாப்புக்காக போலிசார் சுட்டத்தில் ஜாபர் குலாம் உசேன் இரானி இறந்து விட்டான்.
அடுத்தடுத்த வழிப்பறிப்பு சம்பவங்களும் போலீசாரின் விரைந்த நடவடிக்கையும் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைந்து செயல்பட்ட போலீசாருக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திடீரென்று வடமாநில கொள்ளையர்கள் சென்னைக்குள் வந்தது எப்படி? அதுவும் விமானப் பயணத்தில் தப்பியோடச் சென்றது எப்படி? இவர்களுக்கு விமான டிக்கெட் வாங்கியது யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை தொடர்வதாகக் கூறப்படுகிறது.
சமூகத்தளத்தில் இது அரசியல் சதியா என்ற கேள்விகளை முன் வைக்கிறார்கள். அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கொள்ளையர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்களா என்ற கேள்விகளை எழுப்புகிறார்கள்.