எந்த வடக்குப் பேரரசும் தமிழ் மண்ணைத் தொட்டதில்லை.. தங்கம் தென்னரசு அதிரடி!!

 
Thangam Thennarasu

நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் உரை அளித்தார். நிதியமைச்சரின் பதிலுரையில் வட இந்தியாவில் கோலோச்சிக் கொண்டிருந்த எந்தப் பேரரசு தமிழ் மண்ணை ஆள முடியவில்லை என்று வரலாற்று ஆதாரங்களைச் சுட்டிக் காட்டிப் பேசிய போது சட்டமன்றமே அதிரந்தது.

"வடக்கே இருந்து வரக்கூடிய எந்த ஒரு ஆதிக்கத்திற்கும் தமிழ்நாடு வரலாற்றில் எந்தக் காலக்கட்டத்திலும் தலைவணங்கியது இல்லை. இந்தியாவுக்கு வந்த மகா அலெக்சாண்டரின் வெற்றிப் பாதையில் தமிழ்நாடு ஒரு போதும் இருந்ததில்லை.மௌரியப் பேரசரர் சந்திரகுப்த மௌரியரால் தமிழ்நாட்டிலே தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை. அசோகச் சக்ரவர்த்தியுடைய ஆட்சிச் சக்கரம் தமிழ் நிலப்பரப்பில் சுழல வில்லை. குப்தர்களின் காலம் பொற்காலம் என்று அழைக்கப்பட்டாலும் சமுத்திரகுப்தனின் காலடி கடைசிவரை இந்த தமிழ்மண்ணில் படியவில்லை. கனிஷ்கரின் ஆட்சி எல்லை என்பது விந்தியத்திற்கு தெற்கே ஒரு போதும் தாண்டியதில்லை.

அக்பர் பாதுஷாவின் ராஜ்யம் தமிழ்நாட்டை எட்ட முடியவில்லை. இந்த பேரண்டத்திற்கே அரசன்என தன்னை ஆலம் கீர் என்று அழைத்துக் கொண்டாரே ஔரங்கசிப், அந்த ஔரங்கசிப்பால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை. அந்த ஔரங்கசிப்பால் மலை எலி என்று அழைக்கப்பட்டாரே மராட்டிய மண்ணினுடைய சக்ரவர்த்தி சிவாஜி, அவரால் தமிழ்நாட்டை ஆட்சி செய்யமுடியவில்லை. இந்த வரலாறு தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரித்தான வரலாறு ஆகும்

வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் மானம் காக்கும் நாடு எங்கள் தமிழ்நாடு என்ற உறுதியோடு எங்கள் அருமைத் தலைவர் கலைஞர் அவர்களின் காவிய வரிகளை நினைவுகூர்கிறேன். புலியின் குகையிலே அழகில்லை,புதுமையில்லை எனினும் மெய்சிலிர்க்கும்.கீழிருந்தும் தன்மையுடன் தலைகாக்கும் மானத்தின் உறைவிடம் எங்கள் தமிழ்நாடு. இமயவரம்பினில் வீரம் சிரிக்கும். இங்கே வீணை நரம்பினில் இசை துடிக்கும். அதுவும் மானம் மானம் என்றே முழுங்கும்” என்று கூறி உரையை நிறைவு செய்தார் தங்கம் தென்னரசு.

 


 

From around the web