பிள்ளைகளின் படிப்புக்கான திட்டங்களை தொடர்வோம்! முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை

 
MKS

எந்த அப்பாவும் பிள்ளைகள் படிப்புச் செலவுக்கு கணக்கு பார்க்க மாட்டார்கள். அதைப் போலத்தான் எத்தனை நிதி நெருக்கடி வந்தாலும் புதுமைப் பெண் திட்டத்தையும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தையும் தொடர்ந்து நடத்துவோம். வந்த பாதையை மறக்காம இருந்தால் தான் வழி தவறிடாம முன்னேறிப் போக முடியும் என்று கல்லூரி மாணவிகள் மத்தியில் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பிற்காக மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை  அரசு உதவியுடன் இயங்கும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கும் விரிவாக்கும் திட்டத்தை தூத்துக்குடியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவில் மாணவிகளும் பெற்றோர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், இன்று தமிழ்நாட்டுப் பெண்கள் உயர்கல்வியில் நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னால் ஏன் 100 ஆண்டுகளுக்கு முன்னால் இதை நினைத்துப் பார்க்க முடியுமா. பாலினம் மற்றும் சாதி அடிப்படையில் கல்வி பெண்களுக்கு மறுக்கப்பட்டது. நீதிக் கட்சி ஆட்சியில் தான் அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தை உருவாக்கினார்கள். பெருந்தலைவர் காமராஜர் பெருமளவில் பள்ளிகளைத் திறந்தார். முத்தமிழர் கலைஞர் கல்லூரிகளைத் திறந்தார். திராவிட மாடல் ஆட்சியில் தான் பெண்கள் கல்விக்கு முக்கியம் வழங்கப்பட்டு வருகிறது.

பெண்கள் உயர்கல்வி படித்து ஆராய்ச்சி பட்டமும் பெற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். மற்றவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், அது தான் மகள்களாகிய உங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.வந்த பாதையை மறக்காம இருந்தால் தான் வழி தவறிடாம முன்னேறிப் போக முடியும். ஒன்றிய அரசின் நிதி நெருக்கடியை சமாளித்துத் தான் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிறோம். எந்த நெருக்கடி வந்தாலும் பெண்கள் கல்விக்கான திட்டத்த்தை கைவிடமாட்டோம். எந்த அப்பாவும் பிள்ளைகள் செலவுக்கு கணக்குப் பார்க்க மாட்டார்கள். அதைப் போலத்தான் எத்தனை நிதி நெருக்கடி வந்தாலும் புதுமைப் பெண் திட்டத்தையும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தையும் தொடர்ந்து நடத்துவோம் என்று உரையாற்றினார்.


 

 

From around the web